நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!

Updated: Mon, May 27 2024 14:03 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி வீரர்கள் கேகேஆரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணியில் வெங்கடேஷ் ஐயர் அரைசதம் கடந்துடன் 52 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 10.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்து வீசினர். எனது பழைய நண்பர் ஸ்டார்க் எங்களுக்கு எதிராக மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். இன்றைய இரவில் நாங்கள் போதுமான அளவில் சிறப்பாக செயல்படவில்லை. சில பவுண்டரிகளை அடிக்கலாம் என்று நாங்கள் நம்பினோம்.

ஆனால், அவர்களின் பந்து வீச்சில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. முன்னதாக சில நாள்களுக்கு முன்னர் அகமதாபாத் போட்டியில் எப்படி பந்து வீசினார்களோ அதே போலவே இப்போட்டியிலும் அவர்கள் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தினர். இந்த பிட்ச் மிகவும் தந்திரமாக இருந்தது. நாங்கள் 160 ரன்கள் எடுத்திருந்தால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்.

ஏனெனில் இது 200 ரன்கள் அடிக்கும் பிட்ச் இல்லை என்பது தெரியும். நாங்கள் சில ஷாட்டுகளை விளையாடி, கூடுதல் ரன்களைச் சேர்த்திருந்தால் எங்களால் ஓரளவு சமாளித்திருக்க முடியும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எங்கள் அணியில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. எங்கள் வீரர்கள் விளையாடிய விதம் பேட்டிங் செய்த விதம் நன்றாக இருந்தது. மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் நாங்கள் எடுத்து இருக்கிறோம். அதை செய்ய உங்களுக்கு அதீத திறமை வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை