பேட்டிங் சரிந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது - பாபர் ஆசாம்!

Updated: Sat, Oct 14 2023 21:55 IST
Image Source: Google

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் விளையாடி பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணி தரப்பில் பாபர் ஆசம் 50 ரன், ரிஸ்வான் 49 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், பாண்ட்யா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக ரோஹித், கில் களம் புகுந்தனர். இதில் கில் 16 ரன் எடுத்த நிலையிலும் அடுத்து வந்த கோலியும் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். 

இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 63 பந்தில் 86 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கேஎல் ராகுல் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம், “இந்த ஆட்டத்தில் நாங்கள் நல்லவிதமாக தொடங்கினோம். நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம். இயல்பான கிரிக்கெட்டை விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை நாங்கள் கொத்தாக தவற விட்டோம். 

இதனால் நாங்கள் தொடங்கிய விதத்தை சிறப்பாக முடிக்க முடியாமல் தவற விட்டோம். நிச்சயமாக இது எங்களுக்கு நல்லது கிடையாது. நாங்கள் தொடங்கிய விதத்தை பார்த்தால் நாங்கள் 290 ரன்கள் குவிப்போம் என நினைத்தேன். ஆனால் எங்களுடைய பேட்டிங் சரிந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் நிர்ணித்த இலக்கை எல்லாம் சரியே கிடையாது. 

இதேபோன்று பந்துவீச்சிலும் நாங்கள் சொதப்பினோம். புதிய பந்தில் நாங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ரோஹித் சர்மா விளையாடுகிற விதம் பிரமிப்பாக இருந்தது. நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறலாம் என்று நினைத்தோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை