CWC 2023 Qualifiers: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளத்தை வீழ்த்தியது நெதர்லாந்து!

Updated: Sat, Jun 24 2023 19:40 IST
Image Source: Google

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய நேபாள் அணியில் தொடக்க வீரர் ஆசிஃப் ஷேக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏற்றமற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து குஷார் புர்டல் 27, பீம் ஷார்கி 22, ஆரிஃப் ஷேக் 6 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரோஹித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற 33 ரன்களை எடுத்திருந்த கேப்டன் ரோஹித்தும் விக்கெட்டை இழந்தார். இதனால் 44.3 ஓவர்களில் நேபாள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளையும், பாஸ் டீ லீட், விக்ரம்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.    

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - விக்ரம்ஜித் சிங் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரம்ஜித் சிங் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெஸ்லி பரேசி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட மேக்ஸ் ஓடவுட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 90 ரன்களைச் சேர்த்திருந்த ஓடவுட் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஆனால் மறுபக்கம் இறுதிவரை விளையாடிய பாஸ் டி லீட் 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணி 27.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ் ஓடவுட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை