இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஐசிசி்யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கும் ஜெரால்ட் கும்பி - இன்னசெண்ட் கையா இணை தொடக்கம் கொடுத்தனர்.  இதில் கையா 32 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் கும்பியுடன் இணைந்த கேப்டன் சீன் வில்லியம்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

Advertisement

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 78 ரன்களில் கும்பி விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன் வில்லியம்ஸ் சதமடித்து அசத்தினார்.  இதற்கிடையில் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ரஸா 48 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் பார்ல் அதிரடியாக விளையாடி வெறும் 16 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகளை விளாசி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சீன் வில்லியம்ஸ் 101 பந்துகளில் 21 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 400 ரன்களை கடந்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், மதோனி, மோனாக் படேல், ஆரோன் ஜோன்ஸ், கஜானந்த் சிங், ஷ்யான் ஜஹாங்கீர் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அமெரிக்க அணி 25.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களில் ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் நக்வரா, சிக்கந்தர் ரஸா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இரண்டாவது அணி எனும் சாதனையையும் ஜிம்பாப்வே அணி படைத்துள்ளது. முன்னதாக நடப்பு  2023ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News