உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஜஹாங்கீர் சதம்; நேபாளுக்கு 210 டார்கெட்!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து எதிரணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு டெய்லர் மற்றும் மதானி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெய்லர் 4 ரன்களிலும், முக்காமல்லா ரன்கள் ஏதுமின்றியும், ஆரன் ஜோன்ஸ் 2 ரன்களிலும்,கென்ஜிகே 1 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். கடந்த போட்டியில் சதமடித்த கஜானந்த் சிங் இப்போட்டியில் 26 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மதானி 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க 94 ரன்களுக்கே அமெரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷயான் ஜஹாங்கீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜஹாங்கீர் 79 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் கள்மைறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 49 ஓவர்களிலேயே அமெரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் ஜஹாங்கீர் 100 ரன்களை எடுத்து இறுதிவவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நேபாள் அணி தரப்பில் கரன் கேசி 4 விக்கெட்டுகளையும், குல்சன் ஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.