CWC 2023: அமெரிக்காவை 211 ரன்களில் கட்டுப்படுத்தியது நெதர்லாந்து!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹராரேவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸை வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு இப்போட்டியிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சுஷாந்த் மதானி ரன்கள் ஏதுமின்றியும், ஸ்டீவ் டெய்லர் 10 ரன்களுக்கும், முக்கமல்லா 10 ரன்களுக்கும், கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கஜானந்த் சிங் மற்றும் ஷயான் ஜஹாங்கீர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் கஜானந்த் சிங் 33 ரன்களுக்கும், நிசரக் படேல் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர்.
இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷயான் ஜஹாங்கீர் அரைசதம் கடந்த கையோடு 71 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜஸ்தீப் சிங் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் ரியான் கெலின், பாஸ் டி லீட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி எதிரணியை கட்டுப்படுத்தியது.