உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: கஜானந்த் சிங் சதம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Sun, Jun 18 2023 22:20 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.

அதன்படி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் இன்று ஜிம்பாப்வேவில் தொடங்குகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அண், அமெரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்தின. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மெயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரண்டன் கிங் ரன்கள் ஏதுமின்றியும், கைல் மேயர்ஸ் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜான்சன் சார்லஸ் - ஷாய் ஹோப் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்த நிலையில், சார்லஸ் 66 ரன்களிலும், ஷாய் ஹோப் 54 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்தநிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய ரோவ்மன் பாவெலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் - ஜேசன் ஹோல்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார்கள். பிம் சேஸ் 55 ரன்களுக்கும், ஹோல்டர் 56 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, 49.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அமெரிக்கா தரப்பில் ஸ்டீவ் டெய்லர், கைல் பிலீப், நேத்ரவல்கர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டிவ் டைலர் - சுஷாந்த் மொதானி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டைலர் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, மொதானி 14 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் மொனாக் படேலும் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

பின் ஆரோன் ஜோன்ஸ், முக்கமல்லா ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அமெரிக்க அணி 97 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். அதன்பின் களமிறங்கிய கஜானந்த் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த மறுபக்கம் ஜஹாங்கிர் 39 ரன்களிலும், ஜஸ்தீப் சிங் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

ஆனாலும் சற்றும் தளராமல் விளையாடி வந்த கஜானந்த் சிங் அபாரமாக விளையாடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருப்பினும் 50 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கஜானந்த் சிங் 101 ரன்களையும், கென்ஜிகே 34 ரன்களையும் எடுத்திருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கைல் மேயர்ஸ், அல்ஸாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை