CWC Qualifiers Final 2023 : நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது!

Updated: Sun, Jul 09 2023 20:17 IST
Image Source: Google

2023 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்றது . பத்து அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதோடு இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றன .

இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 23 ரன்களிலும், சமரவிக்ரமா 19 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - சஹான் ஆராச்சிகே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஆராச்சிகே 57 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 36 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் இலங்கை அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக், ரையன் கெலின், விக்ரம்ஜித் சிங், சாகிப் சுல்பிகர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் விக்ரம்ஜித் சிங் 13, மேக்ஸ் ஓடவுட் 33, லோகன் வான் பீக் 20 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளையும், தில்சன் மதுஷங்கா 3 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் நெதர்லாந்து அணி 105 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.  இதன்மூலம் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை