காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!

Updated: Fri, Jul 29 2022 18:38 IST
Image Source: Google

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. காமன்வெல்த்தில் முதல் முறையாக இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த்தில் முதல் முறையாக நடக்கும் மகளிர் கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வெர்மா அதிரடியாக பேட்டிங் ஆடி 33 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களை விளாசினார். 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 48  ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஒருமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.  அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஹர்மன்ப்ரீத் கௌர் 34 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார்.

ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஷஃபாலி வெர்மாவின் சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 154 ரன்கள் அடித்த இந்திய மகளிர் அணி, 155 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அலிசா ஹீலி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பெத் மூனி, மெக் லெனிங், தஹிலா மெக்ராத், ரேச்சல் ஹெய்னஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த அஷ்லே கார்ட்னர் - கிரேஸ் ஹாரிஸ் இணை சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் 37 ரன்கள் எடுத்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் ஆட்டமிழந்தார். 

ஆனாலும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லே கார்ட்னர் இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்ததுடன், அரைசதத்தையும் கடந்தார்.

இதன்மூலம் 19 ஓவர்களில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 52 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை