காமான்வெல்த் 2022: ஸ்மிருதி மந்தனா அதிரடி அரைசதம்; இந்தியா அபார வெற்றி!

Updated: Sun, Jul 31 2022 19:41 IST
Image Source: Google

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்துவருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட நிலையில், அந்த போட்டியில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியும்  பார்படாஸுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் தோல்வியடைந்தது. எனவே இந்தியா - பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி கட்டாயத்தில் களமிறங்கின.

காமன்வெல்த்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் போட்டி மழை காரணமாக தாமதமானது. 3.55 மணிக்கு டாஸ் போடப்பட்டு 4.10 மணிக்கு போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. மழை குறுக்கீட்டால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை முனீபா அலி அதிகபட்சமாக 32ரன்கள் அடித்தார்.  

அவரைத்தவிர மற்ற அனைவருமே மிக சொற்பமான ரன்களுக்கு ஆட்டமிழக்க, 18 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி. இந்திய அணி சார்பில் ஸ்னே ராணா மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து 100 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் விளையாடிய ஸ்மிருதி மந்தனா, 42 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 

அவரது சிறப்பான பேட்டிங்கால் 12ஆவது ஓவரிலேயே இலக்கை அடித்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று காமன்வெல்த்தில் வெற்றி கணக்கை தொடங்கியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை