காமன்வெல்த் 2022: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி, தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் சோஃபி டிவைன் - சூஸி பேட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சோஃபி டிவைன் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சூஸி பேட்ஸ் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கல் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தொடக்கத்திலேயே போஷ்க், டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த ப்ரீஸ் 26, லாரா வோல்வார்ட் 28 என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சோலே ட்ரையான் - சுனே லூஸ் இணை பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 39 ரன்களில் டரையானும், 32 ரன்களில் சுனே லூஸும் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.