வார்த்தைப் போரில் மோதும் இலங்கை - வங்கதேசம்!

Updated: Thu, Sep 01 2022 15:33 IST
'Dasun said we have 2 world-class bowlers. I don't see any in Sri Lanka': Bangladesh director's huge (Image Source: Google)

ஆசியக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு தற்போதுவரை ஆப்கானிஸ்தான், இந்தியா அணிகள் தகுதிபெற்றுவிட்டன. நாளை பாகிஸ்தான் அணியும் தகுதிபெற அதிக வாய்ப்புள்ளது. மற்றொரு இடத்திற்கு இலங்கை, வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கடந்த முறை ஆசியக் கோப்பை நடைபெற்றபோது அரையிறுதியில் இலங்கை அணியை வங்கதேச அணி வீழ்த்திய நிலையில் அந்த அணி வீரர்கள், ரசிகர்கள் பாம்பு டான்ஸ் ஆடி இலங்கை அணியை சூடேற்றினர். இதனால், அதிருப்தியடைந்த இலங்கை ரசிகர்கள் இந்தியா, வங்கதேச இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

மேலும், இந்த மோதல் போக்கு இத்தொடு முடிந்துவிடவில்லை. இருதரப்பு தொடர்களின்போதும் இரு நாட்டு ரசிகர்கள் கொந்தளிப்போடு இருந்தார்கள். வீரர்களும் ஆக்ரோஷத்தோடு விளையாடினார்கள். குறிப்பாக அந்தக்கால இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் போலதான் இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.

தற்போது ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு செல்லப் போவது யார் என முடிவு செய்யும் போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனகா, ‘‘வங்கதேச அணி முன்புபோல் இல்லை. அந்த அணியில் ஷாகிப் அல் ஹசனே தவிர சிறந்த பௌலர்கள் இல்லை. பேட்ஸ்மேன்களும் இல்லை. ஆஃப்கானிஸ்தான் அணியைவிட வங்கதேசத்தை வீழ்த்துவது மிகமிக சுலபம்’’ எனக் கூறியிருந்தார்.

இதனால், வங்கதேச அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இலங்கை கேப்டனுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில், வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். 

அப்போது, பேசிய அவர், ‘‘எங்கள் அணியிலாவது ஷாகிப் அல் ஹசன் போன்ற இரண்டு திறமையான பௌலர்கள் இருக்கிறார்கள். ஆனால், இலங்கை அணியில் அதுகூட இல்லை. இப்படிப்பட்ட அணியை யார்தான் வீழ்த்த முடியாது. நாங்கள் நிச்சயம் வீழ்த்துவோம்’’ எனப் பதிலடி கொடுத்தார்.

இதனால், இன்றைய போட்டியில் இலங்கை, வங்கதேச வீரர்கள் நிச்சயம் ஆக்ரோஷத்தோடு மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல ரசிகர்களும் துடிப்போடு கத்திக் கொண்டே இருப்பார்கள் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை