500ஆவது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்த டேவிட் மில்லர்!

Updated: Thu, Sep 26 2024 12:06 IST
Image Source: Google

கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27அவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கயானா அணியில் ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோரது அதிரடியன ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்களையும் , ஷிம்ரான் ஹெட்மையர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களையும் சேர்த்தனர். ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 35 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

கயானா அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, கேப்டன் இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 47 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் பார்படாஸ் ராயல்ச் அணிக்காக விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் சிறப்பு சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் டேவிட் மில்லர் தனது வாழ்க்கையில் 500ஆவது டி20 போட்டியில் விளையாடினார். இதன் மூலம் டி-20 கிரிக்கெட்டில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் மற்றும் உலகின் ஆறாவது வீரர் என்ற பெருமையை டேவிட் மில்லர் பெற்றுள்ளார். அவருக்கு முன்,கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, சோயப் மாலிக், சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ல் ஆகியோர் மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை