சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை நிகழ்த்திய டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலியா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி படுமோசமாக சொதப்பி 35 ரன்களை மட்டும் இலக்காக நிர்ணயித்து படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
மெல்போர்னில் தொடங்கியுள்ள இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி இதற்குமுன், 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களை தொடவே இல்லை. இதனால், இரண்டாவது டெஸ்டில் அபாரமாக செயல்பட்டு தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். ஆனால், அவர்களோ வழக்கம்போலே படுமோசமாக சொதப்பினார்கள்.
தொடக்க வீரர் கேப்டன் டீன் எல்கர் 26 ஓரளவுக்கு தாக்குப்பிடித்த நிலையில் சரேல் எர்வி 18, பவுமா 1, ஜான்டோ 5 போன்றவர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினார்கள். இதனால், தென்னாப்பிரிக்க அணி 67/5 என படுமோசமாக திணறியது.
இதனைத் தொடர்ந்து வெர்ரெனே, மார்கோ யான்சன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்து நீடித்தது. இருவரும் அரை சதமும் கடந்தார்கள். இந்நிலையில் வெர்ரெனே 52, மார்கோ யான்சன் 59 இருவரும் கேமரூன் கிரீனின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்கள்.
இதனால், ஸ்கோர் 179/5 என்பதில் இருந்து 179/6 என மாறியது. தொடர்ந்து மகாராஜ் 2, ரபாடா 4, லுங்கி இங்கிடி 2 ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்ததால், தென் ஆப்பிரிக்க அணி 189/10 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் 5/27 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். டெஸ்டில் இதுதான் இவருக்கு முதல் 5 விக்கெட்கள் ஆகும்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர் கவாஜா ஒரு ரன்னிலும், அடுத்து மார்னஸ் லபுசாக்னே 14 ஆகியோர் ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வார்னர், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். வார்னருக்கு இது 100ஆவது டெஸ்ட் என்பதால், அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில், 100ஆவது டெஸ்ட் போட்டி அவர் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் (45 சதங்கள்) சாதனையை வார்னர் சமன் செய்துள்ளார். இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெய்ல் 42 சதங்களுடன் இருக்கிறார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்து தனது இரட்டை சதத்தையும் நிறைவு செய்தார். இதன்மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மேலும் 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அதன்பின் தசைபிடிப்பு காரணமாக 200 ரன்களைச் சேர்த்திருந்த வார்னர், ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கு.