சென்னை அணி வெற்றிக்கு தகுதியான அணி - டேவிட் வார்னர்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 223 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 87 ரன்களையும் ருதுராஜ் 79 ரன்களையும் துபே 22 ரன்களையும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக வார்னர் 86 ரன்களை எடுத்தார். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்களையும் தீக்ஷனா, பதிரானா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசியா டேவிட் வார்னர், “சென்னை அணி வெற்றிக்கு தகுதியான அணி. இன்றைய போட்டியில் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகச்சிறப்பாகவே இருந்தது. இருந்தாலும் பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. துவக்கத்திலேயே விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் பவுண்டரிகளை அடித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணியின் பவுலர்களுக்கு பிரஷர் இருந்திருக்கும்.
ஆனால் நாங்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததாலேயே இந்த மோசமான தோல்வியை சந்தித்தோம். இந்த தொடரில் இருந்து நாங்கள் கற்ற பாடங்களை வைத்து எங்களது குறைகளை சரி செய்து நிச்சயம் அடுத்த சீசனில் பலமாக திரும்புவோம்” என தெரிவித்துள்ளார்.