ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த டெவிட் வார்னர்!

Updated: Fri, Oct 20 2023 20:02 IST
Image Source: Google

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 124 பந்துகளில் 9 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 121 ரன்களும் விளாசினர்.

ஒருநாள் போட்டிகளில் டேவிட் வார்னருக்கு இது 21ஆவது சதமாகும். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர்ச்சியாக டேவிட் வார்னர் 4ஆவது சதத்தை விளாசியுள்ளார். 2017இல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிட்னி போட்டியில் 130 ரன்களும், அதே ஆண்டில் அடிலெய்டில் 179 ரன்களும் டேவிட் வார்னர் விளாசினார். அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை டவுண்டவுனில் 107 ரன்களும், தற்போது 163 ரன்களும் விளாசி இருக்கிறார்.

இதன் மூலம் விராட் கோலிக்கு பின் ஒரே அணிக்கு எதிராக தொடர்ந்து 4 சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். அதேபோல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னர் அடிக்கும் 5ஆவது சதம் இதுவாகும். இதன் மூலமாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை வார்னர் சமன் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் 7ஆவது முறையாக 150 ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முன்பாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 8 முறை 150 ரன்கள் விளாசி முதலிடத்தில் இருக்கிறார்.

மேலும் உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக டேவிட் வார்னர் 150 ரன்களை கடந்துள்ளார். இந்த போட்டியில் ஏராளமான சாதனையை படைத்த டேவிட் வார்னருக்கு சின்னசாமி மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை அளித்தனர். மேலும் டேவிட் வார்னருக்கு இது கடைசி உலகக்கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை