பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்!

Updated: Sun, Jan 07 2024 21:02 IST
பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்! (Image Source: Google)

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடை அளிப்பதற்காக சிட்னி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கடைசி இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்து பெவிலியன் நோக்கி நடந்த போது, ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று மரியாதையை அளித்தது.

ஆஸ்திரேலியா அணிக்காக 112 போட்டிகளில் விளையாடி 8,786 ரன்களையும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்களையும் விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 சதங்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 22 சதங்களையும் விளாசியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை தன்னிடம் வைத்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளார். அதேபோல் உலகம் முழுவதும் நடக்கும் ஐபிஎல், ஐஎல்டி20, எஸ்ஏடி20, பிஎஸ்எல் என்று பல்வேறு லீக்குகளிலும் விளையாட தீவிரமாக உள்ளார். தற்போது 37 வயதாகும் டேவிட் வார்னர் இன்னும் 3 ஆண்டுகளுக்கு லீக் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் வார்னர், தனது அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், “எதிர்காலத்தில் பயிற்சியாளராகும் ஆசை உள்ளது. ஆனால் இதுகுறித்து என் மனைவியிடம் முதல் ஆலோசிக்க வேண்டும். வீட்டில் இருந்து சில மாதங்கள் வெளியில் தங்க அவர் ஒப்புக் கொண்டால், நிச்சயம் அதற்காக முயற்சிப்பேன்.

அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் வரும் காலங்களில் வீரர்களுக்கு இடையில் ஸ்லெட்ஜிங் என்பதே இருக்காது என்று நினைக்கிறேன். அப்படியே இருந்தாலும் அது எனக்கும் ஷாஹின் அஃப்ரிடிக்கு இடையில் எப்படி ஜாலியாக நடந்ததோ, அதுபோன்றதாக மட்டுமே இருக்கும். இன்னும் பழைய நாட்களை போல் வீரர்களுக்கு இடையில் அதே ஆக்ரோஷத்தை காண முடியாது. இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் வெற்றி மட்டுமே இலக்காக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிக் பேஷ், ஐபிஎல் உள்ளிட்ட அணிகளின் நிர்வாகங்களுடன் டேவிட் வார்னர் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். குறிப்பாக டெல்லி அணிக்காக ஐஎல்லீக் டி20 மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இதனால் டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற பின் நிச்சயம் பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை