சேவாக்கை பின்னுக்குத் தள்ளிய டேவிட் வார்னர்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த ஜூன் 16-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் துவங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் 281 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்னயிக்கப்பட்டது.
அதனை மிகச்சிறப்பாக துரத்திய ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான வீரேந்திர சேவாக்கின் சாதனை ஒன்றினை கடந்துள்ளார்.
அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய டேவிட் வார்னர் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த வேளையில் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு கை கொடுத்திருந்தார். அவர் அடித்த இந்த 45 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக 8,208 ரன்களை இதுவரை அடித்திருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையில் வீரேந்திர சேவாக்கை (8207) பின்னுக்கு தள்ளி அவர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் 11,845 ரன்கள் உடன் முதலிடத்திலும், சுனில் கவாஸ்கர் 9,607 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் கிரேம் ஸ்மித் 9,030 ரன்கள் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் 8,625 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். அவர்களை தொடர்ந்து தற்போது டேவிட் வார்னர் 8,028 ரன்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.