சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த டேவிட் வார்னர்!
தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுநடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷேனின் அசத்தலான சதங்களால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தன.
அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அண் 123 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
இப்போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இதுவரை, 144 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,136 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நேற்றைய சதத்தின் மூலம் தனது 20ஆவது ஒருநாள் சதத்தினை நிறைவு செய்துள்ளார். தொடக்க வீரராக மொத்தம் 46 சதங்கள் அடித்துள்ளார். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 சதனங்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 20 சதங்களையும், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதமும் விளாசியுள்ளார்.
மேலும் நேற்றைய போட்டியில் சதம்டித்ததன் மூலம் டேவிட் வார்னர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். தொடக்க வீரராக சச்சின் 45 சதங்கள் அடித்திருந்த சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார். இதில் டேவிட் வார்னர் 46 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 45 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 42 சதங்களை விளாசி மூன்றாவது இடத்திலும் உள்ளார்.