உங்களை மிஸ் செய்வேன் பிரதர் - வில்லியம்சன் குறித்து வார்னர் உருக்கம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வார்னரை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ஐபிஎல் லீக் போட்டிகளை பொறுத்தவரை வார்னர் ஒரு ஜாம்பவான் வீரர். பல ஆண்டுகளாக தொடர்ந்து ரன்களை குவிக்கும் ஒரு வீரராக இருந்துவருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 150 போட்டிகளில் விளையாடி 5,449 ரன்களை எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார்.
டெல்லி அணியில் இணைந்துள்ளதை அடுத்து தனது நல்ல நண்பரும் ஹைதராபாத் அணி கேப்டனுமான கேன் வில்லியம்சனை மிஸ் செய்யப்போவதாக வார்னர் தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இனி வில்லியம்சன் உடனான எனது காலை உணவைத் தவறவிடப் போகிறேன். உங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை மிஸ் செய்கிறேன் பிரதர்" என்று பதிவிட்டு, வில்லியம்சனுடன் காலை உணவு அருந்தும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
2016இல் ஐபிஎல் பட்டத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வென்றுகொடுத்த வார்னர், கடந்த சீசனில் சில ஆட்டங்களில் மோசமாக விளையாடியததால், அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் மோதல் உருவானது. கேப்டன் பதவியுடன், ஆடும் லெவனில் இருந்தும் அவரை அணி நிர்வாகம் நீக்கியது. அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இதனால் நிறையை போட்டிகளில் விளையாடமல் ஒதுங்கிக்கொண்டார் வார்னர். எதிர்பார்த்தது போல், வார்னரை ஹைதராபாத் அணி தக்கவைக்கவில்லை. மாறாக கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக் மற்றும் அப்துல் சமத் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.
இதையடுத்தே, வார்னர் மீண்டும் ஏலத்தில் பங்கேற்று தற்போது டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான 7 ஆண்டுகால தொடர்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில்தான் தனது பழைய பார்ட்னர் கேன் வில்லியம்சன் தொடர்பாக உருக்கமாக பதிவிட்டுள்ளார் வார்னர்.