AUS vs ENG, 1st ODI: மாலன் அதிரடி சதன்; ஆஸிக்கு 288 டார்கெட்!
ஐசிசியின் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் கடந்தாண்டு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இந்த சீசனில் லீக் சுற்றுகளோடு வெளியேறியது. அதேசமயம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 6 ரன்களிலும், பிலிப் சால்ட் 14 ரன்களிலும், ஜேம்ஸ் வின்ஸ் 5 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் 17 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - ஜோஸ் பட்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பட்லர் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தி வந்த லியாம் டௌசன் 11 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.
ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய வந்த டேவிட் மாலன் டெய்ல் எண்டர்களை வைத்துக்கொண்டே தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். சதமடித்ததுடன் நிக்காமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேவிட் மாலன் 128 பந்துகளில் 134 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆடாம் ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.