உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்ப்டனில் ஜூன் 18ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2ஆவது நாள் ஆட்டம் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பந்து வீச்சை நியூசிலாந்து தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்து.
இதையடுத்து மூன்றாம் நாளான நேற்று இந்திய அணி 271 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்திருந்தது.
இதில் வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ஆம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ஆம் நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக ஆட்டம் தாமதமான நிலையில், லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்ததால், மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் பாதிக்கப்பட்டது.
அதன்பின் தொடர்ந்து 5 மணி நேரங்களுக்கும் மேலாக மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் டே ஆட்டத்துடன் சேர்த்து இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்த போட்டியில் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிப்பது மிகவும் கடினம் என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் உள்ளனர்.