டி20 கிரிக்கெட்டில் நான்காயிரம் ரன்களை கடந்த ரிஷப் பந்த்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி அணியில் ஓபனர் ஸ்ரீகர் பரத் டக் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 89 (62), டேவிட் வார்னர் 52 (41) இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இறுதியில் ரிஷப் பந்தும் 13 (4) தனது பங்கிற்கு ரன்களை சேர்த்த நிலையில், டெல்லி அணி 19.1 ஓவர்கள் முடிவில் 161/2 ரன்களை சேர்த்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
வாழ்வா சாவா போட்டியாக அமைந்த இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய டெல்லி அணி 6ஆவது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
இந்த போட்டியில் 13 ரன்கள் அடித்ததன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் ரிஷப் பந்த் 4,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதில் அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 2,792 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தின் வெற்றி குறித்துப் பேசிய ரிஷப் பண்ட் , ''நாங்கள் முதலில் பந்துவீசியது மகிழ்ச்சியளித்தது. 140-160 ரன்கள் நல்ல ஸ்கோர். அதை நாங்கள் அடைந்து விட்டோம். ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இது எங்களுக்கு மிகச்சிறப்பான ஆட்டமாக அமைந்துவிட்டது'' என்றார்.