ரிஷப் பந்த் அரைசதம்; வெற்றியை நோக்கி இந்திய ஏ அணி!

Updated: Sat, Nov 01 2025 22:30 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோர்டன் ஹார்மன் 71 ரன்களையும், சுபைர் ஹம்சா 66 ரன்களையும், ருபின் ஹர்மான் 54 ரன்களையும் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணியில் ஆயூஷ் மாத்ரே 65 ரன்களையும், சாய் சுதர்ஷன் 32 ரன்களையும், ஆயுஷ் பதோனி 38 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 234 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிரனாலென் சுப்ராயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து 70 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி செனோக்வானே மற்றும் ஸுபைர் ஆகியோர் 37 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்தியா அணி தரப்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனால் இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் சாய் சுதர்ஷன் 12 ரன்னிலும், ஆயூஷ் மாத்ரே 6 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 5 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ரஜத் படித்தார்- ரிஷப் பந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரிஷப் பந்த் அரைசதம் கடந்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் ரஜத் படித்தார் 28 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் ரிஷப் பந்த் 64 ரன்களுடனும், ஆயூஷ் பதோனி ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து மேலும் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நாளை இந்திய ஏ அணி நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை