ரிஷப் பந்த் அதிரடியில் தென் ஆபிரிக்க ஏ அணியை வீழ்த்திய இந்திய ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோர்டன் ஹார்மன் 71 ரன்களையும், சுபைர் ஹம்சா 66 ரன்களையும், ருபின் ஹர்மான் 54 ரன்களையும் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணியில் ஆயூஷ் மாத்ரே 65 ரன்களையும், சாய் சுதர்ஷன் 32 ரன்களையும், ஆயுஷ் பதோனி 38 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 234 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிரனாலென் சுப்ராயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து 70 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி செனோக்வானே மற்றும் ஸுபைர் ஆகியோர் 37 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்தியா அணி தரப்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் இதில் ரிஷப் பந்த் 64 ரன்களுடனும், ஆயூஷ் பதோனி ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 90 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Also Read: LIVE Cricket Score
அவரைத்தொடர்ந்து 34 ரன்களைச் சேர்த்திருந்த ஆயூஷ் பதோனி 34 ரன்களிலும், தனுஷ் கோட்டியான் 23 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மனவ் சுதர் 20 ரன்களையும், அன்ஷுல் கம்போஜ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 37 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இந்திய ஏ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.