அருண் ஜெட்லி மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

Updated: Fri, May 09 2025 16:14 IST
Image Source: Google

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் மேற்கொண்டுள்ள 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தை வெடிக்கச் செய்வதாகக் கூறி டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு (டிடிசிஏ) இன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை அருண் ஜெட்லி மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிடிசிஏ உயர் அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ்-இடம் தெரிவித்தார். அந்த மின்னஞ்சலில், "உங்கள் மைதானத்தில் ஒரு குண்டு வெடிக்கும். இந்தியாவில் பாகிஸ்தானின் உறுதியான ஸ்லீப்பர் செல் செயல்பட்டு வருகிறது. இந்த வெடிப்பு, ஆபரேஷன் சிந்தூருக்கு நாங்கள் பழிவாங்கும் செயலாக இருக்கும்" என்று இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் மின்னஞ்சல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பகிறது. முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய போட்டிகளை விளையாடி வந்தது. மேலும் எதிர்வரும் மே 11ஆம் தேதி இந்த மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுவதாக இருந்தது. 

ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து இன்றைய தினம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது. மேற்கொண்டு வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக அவர்களின் நாட்டிற்கு அனுப்பும் முயற்சியிலும் பிசிசிஐ இறங்கியுள்ளது.

Also Read: LIVE Cricket Score

இந்நிலையில் தான் அருண் ஜெட்லி மைதானத்திற்கு இந்த மிரட்டலானது விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலில் 25 இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் தற்போது பதில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை