SAW vs WIW: மழையால் முதல் ஒருநாள் ஆட்டம் பாதிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஜெஹன்னஸ்பர்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் வில்லியம்ஸ், கிசியா நைட், ஸ்டெஃபானி டெய்லர் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தியான்ட்ரா டாட்டின் சதமடித்ததுடன், 150 ரன்களையும் விளாசினார்.
இதன்மூலம் 45.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் டக்வர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 29 ஓவர்களில் 204 ரன்களை இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்களை எடுத்திருந்தது.
அப்போது மீண்டும் மழை நீடித்த காரணத்தால் இப்போட்டி முடிவில்லாமல் அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 31ஆம் தேதி நடைபெறுகிறது.