IND vs NZ, 1st Test: அறிமுக போட்டியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Fri, Nov 26 2021 10:37 IST
'Debut to remember' as Shreyas Iyer hits maiden Test ton (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதலில் பேட்டிங் விளையாடி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 52 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து புஜாரா 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அருமையாக தொடங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை ஸ்ரேயாஸ் ஐயரும் ஜடேஜாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். முதல் நாள் ஆட்டம் முடியும் வரை அவர்கள் விக்கெட்டை விட்டுக்கொடுக்கவில்லை. முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்திருந்தது. அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் முதல் நாள் ஆட்ட முடிவில் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், 2ஆம் நாளான இன்றைய ஆட்டத்தை அவர்கள் இருவரும் தொடர்ந்தனர்.

இன்றைய ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஜடேஜாவை தொந்தரவு செய்த டிம் சௌதி, இன்று ஜடேஜாவை ரன்னே அடிக்கவிடாமல் அவுட்டாக்கினார். ஆனால் ஜாமிசனின் பவுலிங்கில் பவுண்டரிகளாக விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட்டில் அவரது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை பட்டியலில் இணைந்தார். 

சௌரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, பிரித்வி ஷா ஆகியோர் மட்டுமல்லாது, ஸ்ரேயாஸ் ஐயரின் சிறுவயது பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவும் அறிமுக டெஸ்ட்டில் சதமடித்திருக்கிறார்கள்.  பிரவீன் ஆம்ரேவும் இதே கான்பூரில் தான் அறிமுக டெஸ்ட்டில் சதமடித்தார். குரு அடித்த அதே மைதானத்தில் சிஷ்யன் ஸ்ரேயாஸ் ஐயரும் அறிமுக டெஸ்ட்டில் சதமடித்திருக்கிறார்.

அதன்பின் விருத்திமான் சஹா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் ஐயருடன் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை