இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

Advertisement

அணியின் தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே 2 ரன்களிலும், நிஷன் மதுஷ்கா 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத்தொடர்ந்து 24 ரன்களில் குசால் மெண்டிஸும் , 17 ரன்களில் தினேஷ் சண்டிமாலும், 12 ரன்களில் குசால் மெண்டிஸும், 10 ரன்களில் பிரபாத் ஜெயசூர்யாவும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இலங்கை அணியானது 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

பின்னர் இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வா - அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் எடுத்திருந்த அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்காவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனால் இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு டேன் லாரன்ஸ் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் பந்தில் இருந்தே பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியானது விக்கெட் இழப்பின்றி 22 ரன்களைச் சேர்த்தது. இதில் பென் டக்கெட் 13 ரன்களுடனும், டேன் லாரன்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 214 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணியானது நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News