ஆசிய கோப்பை 2023: மார்ச் மாதத்தில் முக்கிய அறிவிப்பு!

Updated: Sun, Feb 05 2023 17:55 IST
Decision on Asia Cup venue postponed to March 2023 (Image Source: Google)

கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின்  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் விளையாடுவது இல்லை. அதேபோல், 2006ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ  அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.

அடுத்த ஆண்டு ஒருநாள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு அனுமதித்தால் தான் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியும். ஆனால் இந்திய அரசு அனுமதியளிக்க வாய்ப்பேயில்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதை பிசிசிஐயுமே விரும்பவில்லை. 

அதனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பலம் வாய்ந்த கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ தான் என்ற வகையில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்காது; இந்தியா - பாகிஸ்தானுக்கு பொதுவான இடத்தில் தான் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

ஜெய் ஷாவின் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிருப்தியடைய செய்தது. பிசிசிஐ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இதுபோன்று அறிவிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி கடந்த சில நாட்களாக அடங்கியிருந்த நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு பஹ்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடந்தது. 

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பிசிசிஐ செயலாளர் பஹ்ரைன் புறப்பட்டுச் சென்றார். எனினும், அவர் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், வரும் மார்ச் மாதமும் இதே போன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதன் பிறகு தான் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் இழக்க விரும்பாவிட்டால், ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்றும், ஒருவேளை பாகிஸ்தான் அமீரகத்தில் நடத்த ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை