இலங்கை தொடரில் தீபக் சஹார் விளையாடுவது சந்தேகம்!

Updated: Mon, Feb 21 2022 16:13 IST
Deepak Chahar Doubtful For Sri Lanka Series After Sustaining Hamstring (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்தியாவிற்கு கடைசி நேரத்தில் களமிறங்கிய அதிரடியாக பேட்டிங் செய்து அபாரமான பினிஷிங் கொடுத்த சூர்யகுமார் யாதவ் 65 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 35* ரன்களும் எடுத்தார்கள்.

இதை தொடர்ந்து 185 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் 2 போட்டிகளை போலவே சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் 61 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடினார். இருப்பினும் அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் கிரண் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்தியாவின் மிகச் சிறப்பான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 167/9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் இந்தியா அபார வெற்றி பெற்றது. முன்னதாக 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா இந்த போட்டியையும் வென்ற காரணத்தால் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது. 

அத்துடன் இந்த டி20 தொடரில் பெற்ற வைட்வாஷ் வெற்றி காரணமாக சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக இங்கிலாந்தை முந்தியுள்ள இந்தியா புதிய சாதனையையும் படைத்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலககோப்பை 2022 தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்பாக இந்திய அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது இந்திய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

முன்னதாக கொல்கத்தாவில் நேற்று நடந்த 3ஆவது டி20 போட்டியில் 185 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப் ஆகியோர் பவர்பிளே ஓவர்களில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முயன்றார்கள். ஆனால் இந்தியா சார்பில் முதல் ஓவரை வீசிய தீபக் சஹர் முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை எடுத்து அதன் பின் 3ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஆரம்பத்திலேயே போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். இதனால் 26/2 என மோசமான தொடக்கம் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியால் கடைசிவரை அதிலிருந்து மீண்டெழுந்து வெற்றியை பெறமுடியவில்லை.

இந்த போட்டியில் முதல் ஓவரில் விக்கெட் எடுத்த தீபக் சஹர் 2ஆவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட்டை எடுத்து மிகச் சிறப்பாக பந்துவீசி கொண்டிருந்த நிலையில் அவர் வீசிய அந்த ஓவரின் 5ஆவது பந்தில் தசைப்பிடிப்பு காரணமாக காயமடைந்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வலி நிவாரணியை உபயோகித்த போதிலும் அவருக்கு வலி குறையாத காரணத்தால் இறுதியில் வெறும் 1.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தபோது பாதியிலேயே தீபக் சஹர் விலகினார். அதன் காரணமாக அவரின் எஞ்சிய 2.1 ஓவர்களை இளம் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் வீசி முடித்தார்.

தற்போதைய நிலைமையில் அவரின் காயம் பற்றி முழுமையான தகவல் வெளிவராத நிலையில் அவருக்கு முதல் நிலை தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருக்கும் என கருதப்படுகிறது. இது போன்ற காயம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் தள்ளப்படுவார்கள். இதன் காரணமாக வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

ஒருவேளை அவரின் காயம் பெரிய அளவில் இருக்கும் பட்சத்தில் ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிய வருகிறது. பொதுவாகவே பவர் பிளே ஓவர்களில் அபாரமாக பந்துவீசும் திறமை பெற்றுள்ள தீபக் சஹர் பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படுகிறார். அதன் காரணமாக சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 14 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது.

ஆனால் தற்போது அவர் காயமடைந்து உள்ளதால் சென்னை அணி நிர்வாகம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சற்று கவலை அடைந்துள்ளார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை