டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது தான் இலக்கு - தீபக் சஹார்!

Updated: Mon, Jan 29 2024 20:52 IST
Image Source: Google

நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில், அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  

இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை வரவுள்ள ஐபிஎல் தொடரின் செயல்பாட்டை வைத்து தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்பின் 30 வீரர்களைத் தேர்வு செய்துள்ள பிசிசிஐ அவர்களின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணித்து உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  “என்னைப்பொறுத்த வரையில் அனைத்தையும் காட்டிலும் என் தந்தைதான் முக்கியம். அவரால் தான் நான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். நான் சாதித்த அனைத்தும் எனது தந்தையால் தான். அவர் உடல்நலம் சரியில்லாத நேரத்தில் நான் அவருடன் இல்லை என்றால், நான் எப்படிபட்ட மகன்? என்பது எனக்கு தெரியவில்லை.

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான அத்தொடர் இந்தியாவில் நடந்திருந்தால் நிச்சயம் நான் விளையாடி இருப்பேன். ஆனால் அது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றதால் என்னால் தொடரை விட்டு வெளியேறுவதைத் தவிற வேறு வழி தெரியவில்லை. ஏனெனில் நான் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்துசெல்ல 2-3 நாள்கள் தேவைப்படும். அதனால் நான் என் தந்தையுடன் இருக்க விரும்பி அத்தொடரிலிருந்து விலகினேன். எந்தவொரு மகனும் அதையே தான் விரும்புவார்.

நான் அணியில் இருந்து வெளியேறி என் தந்தையுடன் 25 நாட்கள் தங்கி இருந்தேன். தற்போது எனது தந்தையின் உடல்நலம் முன்னேற்றமடைந்துள்ளது.  இருப்பினும் இத்தனை நாள்களில் என்னால் சில உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய முடிந்தது. மேற்கொண்டு என்னால் எந்தவொரு கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொள்ள முடியவில்லை. அதனால் தான் நான் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலும் கூட என்னால் பங்கேற்க முடியவில்லை.

அதனால் தற்போது நான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று நல்ல பயிற்சியையும் மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி உள்ளேன். தற்போது நான் முழு உடற்தகுதியுடன் உள்ளனே. அதிலும் குறிப்பாக ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக நான் தீவிரமாக தயாராகியுள்ளேன். இதற்கு முன்னதாக காயம் காரணமாக நான் இரண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களை தவறவிட்டுள்ளேன். 

இதனால் என்னுடைய இலக்கு தற்போது இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது மட்டும் தான். அந்த வாய்ப்பையும் நான் பெறுவேன் என்று நம்புகிறேன். ஏனெனில் ஒரு வேகப்பந்து வீச்சாளராகவும், அதேசமயம் 7,8,9 வரிசையில் பேட்டிங் செய்ய கூடிய திறனும் கொண்ட எந்த வீரரையும் அணி நிர்வாகம் தேர்வு செய்யும். இதற்கு முன்பும் நான் இந்திய அணிக்காக இதனைச் செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் நடத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்த தீபக் சஹார், இதுவரை 13 ஒருநாள், 25 டி20 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளையும், 256 ரன்களையும் சேர்த்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர் சமீப காலமாக காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். கடைசியாக இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய நிலையில், தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் தொடர்களையும் தீபக் தவற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை