விராட் கோலி குழந்தைக்கு பாலியல் அச்சுறுத்தல் - இன்சமாம் கண்டனம்!
டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது. இனிமேல் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான படுதோல்வி, இந்திய அணியை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி, அந்த அழுத்தத்திலேயே சரியாக ஆடாமல் படுதோல்வி அடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலும் இந்திய அணி சரியாக செயல்படவில்லை. களத்தில் இந்திய அணியின் உடல்மொழியே சரியில்லை என்பதை கேப்டன் விராட் கோலியே போட்டிக்கு பின்னர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின்னர், மனிதத்தன்மையற்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியை அடுத்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பத்து மாத பெண் குழந்தை வாமிகாவுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இந்த மனித்தன்மையற்ற செயலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இன்சமாம் உல் ஹக், “விராட் கோலியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். கோலியின் ஆட்டத்தையோ அல்லது கேப்டன்சியையோ விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.
Also Read: T20 World Cup 2021
கோலியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுப்பவர்கள், இது வெறும் விளையாட்டுத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதற்காக இப்படியெல்லாம் செய்வது மனதை காயப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.