இந்திய மகளிர் அணியின் துணைக் கேப்டான தீப்தி சர்மா நியமனம்!
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய மகளிர் அணி. டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்திலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்றது நியூசிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி.
இன்று நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து. 4-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இந்திய அணி, 17.5 ஓவர்களில் 128 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளவர் ஹர்மன்ப்ரீத் கவுர். இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடாததால் இத்தொடரின் 4 மற்றும் 5ஆவது ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக தீப்தி சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 அணியில் ஸ்மிருதி மந்தனா, துணை கேப்டனாக உள்ளார். 2021இல் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடாதபோது ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட், ஒருநாள் தொடருக்கு மந்தனா, துணை கேப்டனாகப் பணியாற்றினார். இன்றைய ஆட்டத்தில் மந்தனா இடம்பெற்றபோதும் தீப்தி சர்மாவுக்குத் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது.