ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த அஷுதோஷ் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், தங்களுடைய சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் தோல்வியின் விழிம்பில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதிவரை களத்தில் இருந்து கரை செர்த்த அஷுதோஷ் சர்மாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இப்போட்டியில் அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் என 66 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர், சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
அதன்படி ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் 7ஆவது இடத்தில் அல்லது அதற்குக் கீழே களமிறங்கி மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாடியதன் அடிப்படையில் அஷுதோஷ் சர்மா கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வீரர் ஆண்ட்ரே ரஸைல் 36 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதனை தற்போது அஷுதோஷ் சர்மா சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 7ஆவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்களை அடித்த வீரர்கள்
- 68(30) - டுவைன் பிராவோ vs மும்பை இந்தியன்ஸ், வான்கடே, 2018
- 66*(31) - அஷுதோஷ் சர்மா vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், விசாகப்பட்டினம், 2025
- 66(36) - ஆண்ட்ரே ரஸ்ஸல் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே, 2015
- 62*(30) - யூசுப் பதான் vs டெல்லி டேர்டெவில்ஸ், செஞ்சுரியன், 2009
- 56*(15) – பாட் கம்மின்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், புனே, 2022
மேற்கொண்டு இப்போட்டியில் 7ஆம் இடத்தில் களமிறங்கிய அஷுதோஷ் சர்மா 66 ரன்களை விளாசியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 7ஆவது இடத்தில் அல்லது அதற்குக் கீழ் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோரை குவித்த வீரர் எனும் சாதனையும் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் அக்ஸர் படேல் 54 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை அஷுதோஷ் சர்மா முறியடித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸுகாக அதிக ரன்கள் (7ஆவது இடத்தில்)
- 66* - அஷுதோஷ் சர்மா vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 2025*
- 54 – அக்சர் படேல் vs மும்பை இந்தியன்ஸ், 2023
- 52* - கிறிஸ் மோரிஸ் vs மும்பை இந்தியன்ஸ், 2017
- 51 - அமன் கான் vs குஜராத் டைட்டன்ஸ், 2023
இப்போட்டி குறித்து பேசியனால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் 76 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 75 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது பங்கிற்கு 34 ரன்களையும், அறிமுக வீரர் விப்ராஜ் நிகாம் 39 ரன்களையும் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷுதோஷ் சர்மா 66 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.