ஷர்துல் தாக்கூரை விடுவிக்கிறதா டெல்லி கேப்பிட்டல்ஸ்?

Updated: Thu, Oct 27 2022 11:57 IST
Delhi Capitals likely to release Shardul Thakur ahead of the IPL auction (Image Source: Google)

ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனனுக்காக ஆரம்ப பணிகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது. இதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக மினி ஏலத்தை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதில், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் முதல் தேர்வாக உள்ளது. அது சரிவரவில்லை என்றால் வழக்கம் போல் மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனிடையே, அனைத்து ஐபிஎல் அணிகளும் எந்த வீரர்களை விடுவிக்கப்போகிறோம் என்பது குறித்து வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கெடு விதித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஷர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஷர்துல் தாக்கூரை 10 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியுள்ளது.

இதே போன்று கேஎஸ் பரத், மந்தீப் சிங் ஆகியோரையும் டெல்லி அணி விடுவிக்க உள்ளது. இதனிடையே, தற்போது அனைவரின் பார்வையும் சிஎஸ்கே மீது திரும்பியுள்ளது. சிஎஸ்கே அணி ஜடேஜாவை விடுவிக்குமா, விடுவிக்காதா என்பது குறித்து நவம்பர் 15ஆம் தேதி தெரியவரும். இதே போன்று ராபின் உத்தப்பா ஓய்வு பெற்றுவிட்டதால் அவரும் விடுவிக்கப்படுவார். பிராவோ, ராயூடு , கிறிஸ் ஜார்டன், ஆகியோர் இம்முறை சிஎஸ்கேவில் தொடருவதும் கேள்விக்குறியாகி உள்ளது.

மும்பை அணியில் ஜெய்தேவ் உனாத்கட், தைமல் மில்ஸ் ஆகியோர் விடுவிக்கப்படலாம். கொல்கத்தா அணியில் ஆரோன் ஃபிஞ்ச், அஜிங்கியா ரஹானேவும், பஞ்சாப் அணியிலிருந்து ஷாரூக் கானும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை