WPL 2023:டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தைப் பெற்றது டாடா நிறுவனம்!

இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை கடந்த ஆண்டு டாடா நிறுவனம் பெற்றது. இதனிடையே, வீரர்களுக்கு ஐபிஎல் போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு நடைபெற் உள்ளது. அதன் படி மார்ச் 4ஆம் தேதி மகளிர் பிரீமியர் லிக் தொடங்க உள்ளது.
இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் 951 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிமத்திற்கான தொகை குறித்த தகவல் வெளியாகாத நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா குழுமம் பெற்றுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசனின் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் ஆதரவுடன், மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.