தியோதர் கோப்பை: பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ரியான் பராக்; கிழக்கு மண்டலம் அபார வெற்றி!

Updated: Fri, Jul 28 2023 18:19 IST
தியோதர் கோப்பை: பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ரியான் பராக்; கிழக்கு மண்டலம் அபார வெற்றி! (Image Source: Google)

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் வடக்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் 10 ரன்களுக்கும், உட்கர்ஷ் சிங் 11 ரன்களிலும், விராட் சிங் 2 ரன்களிலும், செனாபதி 13 ரன்களிலும், சௌரவ் திவாரி 16 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கிழக்கு மண்டல அணி 57 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த ரியான் பராக் - குஷாக்ரா இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குஷாக்ரா 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதேசமயம் மறுபக்கம் 5 பவுண்டரி 11 சிக்சர்கள் என 131 ரன்களை எடுத்திருந்த ரியான் பராக்கும் ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் கிழக்கு மண்டல அணி 8 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைச் சேர்த்தது. வடக்கு மண்டலம் தரப்பில் மயங்க் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வடக்கு மண்டல அணியில் பிரப்ஷிம்ரான் சிங் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா 44 ரன்களிலும், ஹிமான்ஷு ரானா 40 ரன்களிலும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் நிதிஷ் ரனாவும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தனார். 

பின்னர் களமிறங்கிய மந்தீப் சிங் அரைசதம் அடித்த கையோடு ஆட்டமிழக்க, ஷுபம் ரோஹிலா 41 ரன்களுக்கும், அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலும் என அடுத்தது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வடக்கு மண்டல அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்களை மட்டுமே எடுத்தது. 

கிழக்கு மண்டல அணி தரப்பில் ரியான் பராக் 4 விக்கெட்டுகளையும், ஷஃபாஸ் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் கிழக்கு மண்டல அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வடக்கு மண்டல அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை