தியோதர் கோப்பை: மீண்டும் சதமடித்து அசத்திய ரியான் பராக்; இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி!

Updated: Tue, Aug 01 2023 18:06 IST
தியோதர் கோப்பை: மீண்டும் சதமடித்து அசத்திய ரியான் பராக்; இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி! (Image Source: Google)

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது போட்டியில் கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

புதுச்சேரியில் நடைபெற்ற இப்போட்டியில் கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அபிமன்யூ ஈஸ்வரன் 38 ரன்களுக்கும், உட்கர்ஷ் சிங் 50 ரன்களிலும், விராட் சிங் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரிசவ் தாஸ் 3 ரன்களிலும், கேப்டன் சவுரப் திவாரி 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, கிழக்கு மண்டல அணி 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அப்போது களமிறங்கிய ரியான் பராக் அதிரடியாக பல சிக்சர்களை விளாசி தள்ளினார். தேவைக்கேற்ப பவுண்டரியும் சிக்சர்களும் பறக்க, கிழக்கு மண்டல அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. எதிர்முனையில் நின்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரியான் பராக் சிறப்பாக ஆடி 68 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். அதில் 6 பவுண்டரியும், 5 சிக்சர்களும் அடங்கும்.

இவரின் அதிரடி ஆட்டத்தால் கிழக்கு மண்டல அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. 3 நாட்களுக்கு முன் வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடிய ரியான் பராக் சதம் விளாசி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கு மண்டல அணியில் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய சமர்த் வியாஸ், ராகுல் திரிபாதி, சர்ஃப்ராஸ் கான், கதன் படேல், ஷிவம் தூபே, ஷம்ஸ் முலானி, அதித் சேத், ராஜ்வர்தன் ஹங்கேர்கர், நக்வாஸ்வல்லா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்விக் தேசாய் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 92 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் மேற்கு மண்டல அணி 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

கிழக்கு மண்டல அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மணிசங்கர் முராசிங் 5 விக்கெட்டுகளையும், உட்கர்ஷ் சிங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் கிழக்கு மண்டல அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு மண்டல அணியை வீழ்த்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இதையடுத்து ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியை எதிர்த்து கிழக்கு மண்டல அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை