ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வில் இணைகிறாரா டெவால்ட் ப்ரீவிஸ்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் போட்டிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பெரிதளவில் எடுபடாத நிலையில், கெய்க்வாட்டும் விலகியது அணிக்கு சரிவை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டிற்கான மாற்று வீரரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியிலும் சிஎஸ்கே அணி இறங்கிய நிலையில், மும்பை தொடக்க வீரர் ஆயுஷ் மத்ரேவை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்தது. தற்போது 17 வயதான மத்ரே, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் அணியிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 21 வயது இளம் அதிரடி பேட்டர் டெவால்ட் பிரெவிஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் இந்திய ரசிகர்கள் மத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் முழுமையான மஞ்சள் நிற புகைப்படத்தை பதிவுசெய்ததன் மூலம், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்அணியில் தான் ஒரு பகுதியாக மாற முடியும் என்பதை குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்சமயம் 21 வயதான டெவால்ட் பிரெவிஸ் தென் ஆப்பிரிக்காவின் வருங்கால நட்சத்திரமாகக் கருதப்படுகிறார். அது மட்டுமல்லாமல், பிரெவிஸின் பேட்டிங் பாணியானது உலகின் சிறந்த பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. இதன் காரணமாகவே கிரிக்கெட் ரசிகர்கள் அவர் பேபி ஏபிடி என்றும் அழைத்து வருகின்றனர். ஆனாலும் ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் அவர் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 230 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விடுத்த நிலையில், நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்திலும் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. இந்நிலையில் தான் அவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஏனெனில் சிஎஸ்கே அணியின் தற்போது வெளிநாட்டு வீரருக்கான ஒரு இடம் காலியாக உள்ள நிலையில், அதில் அவர்கள் டெவால்ட் பிரீவிஸை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.