4,6,6,6,6,6: ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசிய விமல் குமார் - காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விமல் குமார் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் விமல் குமார் ஒரே ஓவாரில் 5 சிக்ஸர்களை விளாசியதுடன் 34 ரன்களை குவித்தும் அசத்தினார்.
அந்தவகையில் இன்னிங்ஸில் 17ஆவது ஓவரை சூப்பர் கில்லிஸ் தரப்பில் ரோஹித் சுதிர் வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட விமல் குமார் முதல் பந்தை பவுண்டரி அடித்தார். அதன்பின் இரண்டாவது பந்தில் மிட் விக்கெட்டிலும், மூன்றாவது பந்தில் லாங் ஆஃபிலும், 4ஆவது பந்தில் ஸ்டிரெட்டிலும், 5ஆவது பந்தில் டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையிலும் கடைசி பந்தில் ஃபைன் லெக்கிலும் என அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார்.
இதன்மூலம் அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக அவர் 34 ரன்களைக் குவித்து தனது அரைசதத்தைக் கடந்ததுடன், அணியின் வெற்றியையும் உறுதிசெய்து அசத்தினார். மேலும் டிஎன்பிஎல் தொடர் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் தனித்துவ சாதனையையும் விமால் குமார் படைத்துள்ளார். இந்நிலையில் விமல் குமார் ஒரே ஓவரில் 34 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது பாபா அபாரஜித் மற்றும் ஜெகதீசன் ஆகியோரது அரைசதத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைக் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 81 ரன்களையும், பாபா அபாரஜித் 67 ரன்களையும் சேர்த்தனர். திண்டுக்கல் தரப்பில் சசிதரன் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டிராகன்ஸ் அணியில் ஷிவம் சிங் 27 ரன்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 21 ரன்களையும், பாபா இந்திரஜித் 42 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த விமல் குமார் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 65 ரன்களைச் சேர்த்ததன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.