ரஞ்சி கோப்பை அரையிறுதி தோல்வி; பயிற்சியாளரை சாடும் தினேஷ் கார்த்தி!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 40ஆவது முறையாக இறுதிப்போடிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அணி மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 146 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின் விளையாடிய மும்பை அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால் நிச்சயம் இப்போட்டியில் தமிழ்நாடு அணி கம்பேக் கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன்பின் இணைந்த ஷர்துல் தாக்கூர் - தனுஷ் கோட்யான் இணையின் அபார ஆட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அணி பந்துவீச்சாளர் தவறினர். இதனை பயன்படுத்தி ஷர்துல் தாக்கூர் 109 ரன்களையும், தனுஷ் கோட்யான் 89 ரன்களையும் சேர்க்க மும்பை அணி வலுவான முன்னிலையைப் பெற்றது. அதன்பின் களமிறங்கிய தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் இரண்டாவது இன்னிங்ஸிலும் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி வெறும் 162 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இப்போட்டி முடிவுக்கு பின் பேசிய தமிழ்நாடு அணி பயிற்சியாளர் குல்கர்னி, “முதல் நாள் 9 மணிக்கே நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்” என தெரிவித்திருந்தார்.
அதவாது முதல் நாள் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்ததே அணியின் தோல்விக்கு காரணம் என்பது போல் குல்கர்னி கூறினார். ஆனால் ஒரு அணி தோல்வியடையும் போது கேப்டன் மற்றும் அணி வீரர்களுடன் பயிற்சியாளர் நிற்க வேண்டும். ஆனால், கேப்டனை குறை கூறுவது சரியல்ல என பயிற்சியாளர் குல்கர்னிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், இது மிகவும் தவறானது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அணியை அரையிறுதிக்குக் கொண்டு வந்த கேப்டனை ஆதரிப்பதற்குப் பதிலாக, நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கும் என நினைத்து, பயிற்சியாளர் தனது கேப்டனையும், அணியினரையும் குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.