நிச்சயம் என்னை உலக கோப்பை தொடரில் பார்ப்பீர்கள் - தினேஷ் கார்த்திக்!

Updated: Thu, Aug 10 2023 20:30 IST
Image Source: Google

இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 48 போட்டிகள் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற இருக்கின்றன. அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள ஒரு அணியாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்னும் பிசிசிஐ உறுதி செய்யவில்லை. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. அதன் பிறகு அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் ஆஃப்கானிஸ்தான் அணியையும், அதன் பிறகு அக்டோபர் 14ஆம் தேதி பாகிஸ்தான அணியை அகமதாபாத் மைதானத்திலும் எதிர்கொள்ள உள்ளது.

இந்த தொடரில் ஆரம்ப கட்ட போட்டிகளில் வெற்றி பெற்று விட்டால் நிச்சயம் இந்திய அணியின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசம் என்பதனால் இந்திய அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை இதுவரை பிசிசிஐ அறிவிக்காமல் உள்ள வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக யார் களம் இறங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் ரிஷப் பந்த் இன்னும் முழுவதுமாக குணமடையாததால் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை. அதேபோன்று கேஎல் ராகுலின் பிட்னஸும் இன்னும் உறுதி செய்யப்படாததால் தற்போதைக்கு இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரே உலகக் கோப்பை தொடருக்கான விக்கெட் கீப்பர் தேர்வில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்த உலகக் கோப்பை தொடரில் யார் விளையாட வேண்டும்? என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் தினேஷ் கார்த்திக் என்று ரிப்ளை செய்துள்ளார். அவரது அந்த டிவீட்டிற்கு பதில் கொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், நிச்சயம் என்னை உலக கோப்பை தொடரில் பார்ப்பீர்கள் என தெரிவித்துள்ளார்.

தற்போது 38 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் ஒருநாள் அணியில் இருந்தே கழட்டிவிடப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவர் உலககோப்பை தொடரில் என்னை பார்ப்பீர்கள் என்று தினேஷ் கார்த்திக் போட்டுள்ள இந்த பதிவானது வைரலாகி உள்ளது. நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை. அதேவேளையில் அவர் உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை