இந்திய அணி பேட்டிங் செய்த விதம் பாகிஸ்தான் அணியை கவலையடைய வைத்துள்ளது - தினேஷ் கார்த்திக்!
நேற்று ஆசிய கோப்பை இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டி 24.1 ஓவர் வீசி இருக்கும் பொழுது மழையின் காரணமாக நிறுத்தப்பட்டு, இன்றைய நாளுக்கு தொடர்கிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாசை தோற்றார். ஆனால் பேட்டிங் இன்டெண்ட்டை அவர்கள் தோற்காமல் இருந்தார்கள்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் நேற்று பாகிஸ்தானின் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சுக்கு எதிராக வெளிப்பட்டது. புதிய பந்தில் மிகவும் அபாயகரமானவரான ஷாகின் சா அப்ரிடி வீசிய முதல் ஓவரில் ரோஹித் சர்மா சிக்சர் விளாசினார். இதற்கு அடுத்து இளம் வீரர் ஷுப்மன் கில் அதிரடிக்கு பொறுப்பை எடுத்து, பாகிஸ்தானின் எல்லா வேகப்பந்துவீச்சாளர்களையும் விரட்டினார்.
பவர் பிளே முடியும் வரை பொறுமை காட்டிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சதாப் கான் வந்ததும், அதிரடியில் இரண்டு மடங்காகி நொறுக்கினார். இந்த ஜோடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தது. ரோஹித் சர்மா 49 பந்தில் 56 ரன்கள், கில் 52 பந்தில் 58 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவிற்கு நல்ல துவக்கம் கிடைத்ததோடு, தொடர்ந்து இந்த தொடரில் உற்சாகமாக விளையாட நல்ல மனநிலையும் இந்த ஆட்டத்தால் கிடைத்திருக்கிறது!
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “ஷாகின் அஃப்ரிடிக்கு எதிராக ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் பேட்டிங் செய்த விதம் பாகிஸ்தான் அணியை கவலையடைய வைத்திருக்கும். இன்னிங்ஸ் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு நல்ல நிலைமையே இருந்தது. ஆனால் இந்தியா மிகத் தைரியமாக ஷாட்கள் விளையாடியது. ஷாகின் அஃப்ரிடியின் மெதுவான பந்துவீச்சை, அவரது மணிக்கட்டு பிளிக் காரணமாக நாம் கணித்து எடுப்பது கஷ்டமாக இருக்கிறது. இரண்டாவது முறையாக இந்த முறையில் இந்திய பேட்ஸ்மேனை ஷாகின் அஃப்ரிடி ஏமாற்றி இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
தற்பொழுது இந்திய அணி இரண்டாவது நாளில் இந்த போட்டியில் இருக்கிறது. மேலும் கொழும்பில் பந்துவீச்சுக்கு உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி இன்று மேற்கொண்டு எப்படி விளையாடும்? என்பது சுவாரசியமான ஒன்று. களத்தில் இந்திய ரன் மெஷின் விராட் கோலி மற்றும் சீனியர் வீரர் கே எல் ராகுல் இருவரும் இருக்கிறார்கள். அனுபவத்திற்கும் திறமைக்கும் பஞ்சம் கிடையாது. ஆனால் இவர்கள் மேற்கொண்டு பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சை சமாளித்து, எந்த வகையில் ரன் கொண்டு வருவார்கள்? என்பது முக்கியமானது.