விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக் !

Updated: Tue, Jul 19 2022 20:59 IST
Image Source: Google

கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் அதிகம் பேசப்பட்டது விராட் கோலி எப்போது ஃபார்முக்கு வருவார் என்பதுதான்.  தற்போது 33 வயதான மூத்த வீரர் விராட் கோலி, இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தவர். தனது ஆக்ரோஷமான ஆட்டத்தாலும், அதிவேக ரன் குவிப்பாலும் ரன் மெஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இதனால் சர்வதேச அளவில் நம்பர் ஒன் வீரராகவும் இருந்து வந்தார். ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு விராட் கோலி செஞ்சுரி எதுவும் அடிக்கவில்லை. ரன்கள் குவிக்கவும் தடுமாறி வருகிறார்.

இதனால் கடந்த ஆண்டு அவர், அனைத்து விதமானப் போட்டிகளில், கேப்டன் பொறுப்புகளில் இருந்து பதவி விலகினார். இதையடுத்து இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு டூ பிளசிஸ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். கேப்டன் பொறுப்பு அழுத்தம் காரணமாகவே ரன்கள் குவிக்க கோலி தடுமாறுவதாக கூறப்பட்டு வந்தாலும், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியப் பின்னரும், சொற்ப ரன்களே எடுத்து ஆட்டம் இழப்பதால், அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ள தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் , விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். தற்போதைய சரிவில் இருந்து மீண்டு வந்து விரைவில் விராட் கோலி ரன்கள் குவிப்பார் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் விராட் கோலி ரன் எடுப்பதில் மிகவும் தடுமாறியது, பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அணியை விட்டு விலகி சில காலத்திற்கு அவர் ஓய்வு எடுக்கலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா போன்றோர் விராட் கோலிக்கு ஆதரவாக பேசினர்.

தற்போது தினேஷ் கார்த்திக்கும், விராட் கோலி போன்ற திறமையான வீரரை அவ்வளவு எளிதில் இந்திய அணியில் இருந்து நிராகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மகத்தான வெற்றிகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேறியுள்ளது, அவருக்கு ஒரு நல்ல இடைவெளியை கொடுத்து, மீண்டும் புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் அணிக்கு திரும்ப உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஃபார்ம் இழந்து தவித்தநிலையில், அவள்ளவளவு எளிதில் தன்னால் அணிக்கு திரும்ப முடியவில்லை என்றும், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடுமையாக உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அணியில் எப்போதும் போட்டி இருக்கும் என்றும், இந்திய கிரிக்கெட்டின் அழகே அதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில், ஒரு அணியாக நாங்கள் வரவிருக்கும் உலகக் கோப்பையின் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு தயாராகி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இந்திய அணியில் சாதகமான சூழல் நிலவுவதாகவும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை