ஐபிஎல் 2024: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த தினேஷ் கார்த்திக்!

Updated: Sun, May 12 2024 22:42 IST
Image Source: Google

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியானது 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டூ பிளெசிஸ் 6 ரன்களிலும், விராட் கோலி 27 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இணைந்த ராஜத் பட்டிதார் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ராஜத் பட்டிதார் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 5ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஜத் பட்டிதார் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸும் 41 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய கேமரூன் க்ரீன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கி மஹிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்நில் சிங், கரண் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இப்போட்டியில் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தினேஷ் கார்த்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள்

  • தினேஷ் கார்த்திக் - 18 முறை
  • ரோஹித் சர்மா - 17 முறை
  • கிளென் மேக்ஸ்வெல் - 17 முறை
  • பியூஷ் சாவ்லா - 16 முறை
  • சுனில் நரைன் - 16 முறை
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை