மீண்டும் உள்ளூர் போட்டிகளுக்கு திரும்பும் தமிழக நட்சத்திரம்!
தமிழகத்தின் இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி உலகத்தரம் வாய்ந்த வீரராக இந்தியாவுக்கு பரிசளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் வரும் ஜூன் 23 முதல் ஜூலை 31ஆஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது.
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உட்பட தமிழகத்தின் டாப் 8 மாவட்டங்களை மையமாகக் கொண்ட 8 அணிகள் கோப்பைக்காக 32 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் 28 லீக் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.
அதன்பின் ஐபிஎல் தொடரை போல குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளின் வாயிலாக ஜூலை 31இல் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாட போகும் 2 அணிகள் தீர்மானிக்கப்பட உள்ளன. இந்த வருடம் புகழ்பெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அல்லாமல் திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் இந்த தொடர் நடைபெற உள்ளது. அதில் வரும் ஜூன் 23ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் மற்றும் நெல்லை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த தொடரில் நிறைய இளம் தமிழக வீரர்களுடன் ஒரு சில நட்சத்திர வீரர்களும் களமிறங்க உள்ளார்கள். இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சீனியர் வீரர் முரளி விஜய் காயத்திலிருந்து குணமடைந்து விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் தமிழகத்திற்காக அசத்திய இவர் 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரராக அதிரடியாக பேட்டிங் செய்து பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். அதிலும் மேத்யூ ஹைடன், மைக் ஹஸ்ஸி ஆகியோருடன் ஓபனிங் வீரராக இவர் விளையாடிய காலங்களை ரசிகர்கள் மறக்க முடியாது.
அதனால் 2008இல் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர் 2010இல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். அதில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்காத இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 61 போட்டிகளில் 12 சதங்கள் உட்பட 3,982 ரன்களை 38.29 என்ற ஓரளவு நல்ல சராசரியில் எடுத்தார். இருப்பினும் சேவாக், கம்பீர், ரோஹித் என நிறைய நட்சத்திர தொடக்க வீரர்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடிக்க தவறிய அவர் இந்தியாவுக்காக கடைசியாக 2018இல் விளையாடி இருந்தார்.
ஆனாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் ரஞ்சி கோப்பையில் விளையாடி வந்த இவர் 2020 வாக்கில் காயத்தால் வெளியேறி கிட்டத்தட்ட 2 வருடங்களாக எந்த வித கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். தற்போது அதில் இருந்து குணமடைந்த அவர் டிஎன்பிஎல் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடப் போவதாக அறிவித்து பேசியது பின்வருமாறு.
இதுகுறித்து பேசியுள்ள முரளி விஜய், “முன்கூட்டியே விளையாட விரும்பினேன். ஆனால் சில காயங்கள் தடுத்துவிட்டது. மேலும் எனது சொந்த வாழ்க்கையில் நிறைய அம்சங்கள் எதிர்பாராத வேகத்தில் சென்றதால் அதன் வேகத்தை குறைக்க வேண்டியிருந்தது. ஒரு தனிநபராக எந்த இடத்தில் நான் நிற்கிறேன் என்பதை பார்க்க விரும்பியதால் அந்த இடைவெளி எடுத்துக் கொண்டேன். அதிர்ஷ்டவசமாக டிஎன்சிஏ எனக்கு ஆதரவாக என்னுடைய சூழ்நிலைகளை புரிந்து கொண்டு டிஎன்பிஎல் வாயிலாக கம் பேக் கொடுப்பதற்கு உதவியுள்ளது.
இந்த வருட டிஎன்பிஎல் தொடரில் விளையாட மிகுந்த ஆவலுடன் உள்ளேன். தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் நான் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட எதிர்நோக்கி உள்ளேன். தற்சமயத்தில் எனக்கு எந்த இலக்கும் கிடையாது. வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறேன். டிஎன்பிஎல் தமிழ்நாடு கிரிக்கெட்டுக்கு வரப்பிரசாதமாகும். இதில் இளம் வீரர்களுடன் இணைந்து எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்” என்று கூறினார்.
அதாவது காயத்தை விட கடந்த 2 வருடங்களில் சொந்த வாழ்க்கையில் நிறைய எதிர்பாராத அம்சங்கள் வேகமாக சென்றதால் அதை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இடைவெளி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கும் முரளி விஜய் அதிலிருந்து தற்போது வெளிவந்து உள்ளதால் மீண்டும் டிஎன்பிஎல் வாயிலாக கம்பேக் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.