லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் தினேஷ் கார்த்திக்!

Updated: Tue, Aug 27 2024 22:28 IST
Image Source: Google

இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் கடந்த ஜூன் மாதம் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்தார். இதனையடுத்து அவர் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரான எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். மேற்கொண்டு அத்தொடரின் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எனது ஓய்வு முடிவுக்குப் பிறகு லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை விளையாட மனதளவிலும் உடலளவிலும் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

மிக முக்கியமாக, இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஷிகர் தவான், எதிர்வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், தற்போது தினேஷ் கார்த்திக்கும் இத்தொடரில் விளையாடவுள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 180 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், அதில் ஒரு டெஸ்ட் சதம் மற்றும் 17 அரை சதங்கள் உட்பட 3,463 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 257 போட்டிகளில் 22 அரைசதங்கள் உட்பட 4,842 ரன்கள் எடுத்துள்ளார். கிட்டத்திட்ட இதுவரை நடைபெற்று முடிந்த 17 ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர்.

Also Read: Funding To Save Test Cricket

மேலும் இந்த 17 ஆண்டுகால ஐபிஎல் வாழ்க்கையில், தினேஷ் கார்த்திக் ஆறு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதன்படி 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காக அறிமுகமானார். அதன் பிறகு பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை