பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

Updated: Sat, Oct 14 2023 19:26 IST
பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்! (Image Source: Google)

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் மற்றும் அப்துல்லா ஆகியோர் களம் இறங்கினர். இதில் 20 ரன் எடுத்த நிலையில் அப்துல்லா அவுட் ஆனார்.

இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இமாமுடன் ஜோடி சேர்ந்தார். இதில் இமாம் 36 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரிஸ்வான் பாபர் ஆசமுடன் இணைந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் ஆசம் அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார்.

அதன்பின் களம் இறங்கிய சகீல் 6 ரன், இப்டிகார் அகமது 4 ரன், ஷதாப் கான் 2 ரன், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் 49 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்த தொடர் விக்கெட் வீழ்ச்சி காரணமாக பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதையடுத்து நவாஸ் மற்றும் ஹசன் அலி ஜோடி சேர்ந்தனர்.

இதில் நவாஸ் 4 ரன்னிலும், ஹசன் அலி 12 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் 187 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், குல்தீப், பாண்ட்யா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு சிறந்த பேட்டிங் விக்கெட்டில் வாய்ப்பை வீணடித்துள்ளனர். ஏமாற்றம். மிகவும் ஏமாற்றம்” என பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை