ஐசிசி தொடரின் இந்திய ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது ஸ்டார் டிஸ்னி!
அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஐசிசி தொடர்களின் இந்தியாவில் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான ஏலம் மட்டும் தற்போது நடைபெற்றது. இதர ஆசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான ஏலம் பிறகு நடத்தப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளுக்கான ஐசிசி தொடரின் உரிமம்தை ஸ்டார் நிறுவனம் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வாங்கியது. ஆனால் இம்முறை இந்தியாவிற்கான ஒளிபரப்பு உரிமைக்கான மட்டும் எலம் என்பதால், 12 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஏலத்தின் முதல் சுற்று பாரம்பரிய முறைப்படி சீல் போட்ட கவரில் ஏலத்திற்கான தொகையை கோரப்பட்டது. இதில், ஐசிசி ஒரு டிவிஸ்ட் வைத்தது.
அதாவது, ஏலத்தை வென்றவருக்கும், 2ஆம் இடம் பிடித்தவர்களுக்கும் ஏலம் கேட்ட தொகையில் 10 சதவீதம் மட்டும் தான் இடைவெளி இருந்தால், அடுத்த சுற்று ஏலம் இணைய வாயிலாக நடத்தப்படும் என அறிவித்தது. இந்த நிலையில், அடுத்த 4 ஆண்டுக்கான ஐசிசி தொடர்களை ஸ்டார் டிஸ்னி நிறுவனம் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வென்றுள்ளது.
இதன் மூலம் 2024 டி20 உலக கோப்பை, 2025 சாம்பியன்ஸ் கோப்பை, 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் 2027 ஐசிசி உலகக் கோப்பை என 4 தொடர்களையும் இந்தியாவில் ஸ்டார் நிறுவனம் தான் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடி வந்துள்ளதால், ஐசிசி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிசி, ஸ்டார் டிஸ்னி நிறுவனத்துடன் மீண்டும் கைக் கோர்த்துள்து மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது. ஸ்டார் நிறுவனம் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இது வரை இல்லாத அளவு நிறைய ரசிகர்களுக்கு கிரிக்கெட்டை கொண்டு ஸ்டார் நிறுவனம் சேர்க்கும் என்று நம்புவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. ஐபிஎல் , ஆஸ்திரேலியா கிரிக்கெட் மற்றும் ஐசிசி தொடர் என அனைத்தையும் ஸ்டார் வாங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.